web log free
November 29, 2024

 சுலைமானியை கொன்றதற்கு டிரம்ப் ஷாக் விளக்கம்

ஈரானின் ராணுவ தளபதி காசிம் சுலைமானியை கொல்ல உத்தரவிட்டது ஏன் என்பது குறித்து முதல்முறையாக மனம் திறந்துள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்.

ஈரானின் ராணுவ தளபதி காசிம் சுலைமானியை அமெரிக்க ராணுவம், அந்நாட்டு அதிபர் டிரம்பின் உத்தரவின் பேரில் ஆளில்லா விமானம் மூலம் தாக்கி கொன்றது. ஈரானில் அரசின் உயர்மட்ட தலைவரான அயத்துல்லா அலி காமெனிக்கு அடுத்த இடத்தில் இருந்தவர் காசிம் சுலைமானி.

ஈரானின் ராணுவ தளபதியான இவர் அமெரிக்க உள்ளிட்ட மேற்கத்திய படைகளின் வீயூகங்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தவர். இவரை அமெரிக்க திட்டமிட்டு இப்போது கொன்றுள்ளது. இந்த கொலைக்கு கண்டிப்பாக பழி தீர்ப்போம் என ஈரான் சூளுரைத்தது.

டிரம்ப் அறிவிப்பு

அதன்படியே காசிம் சுலைமானியின் உடல் அடக்கம் செய்யப்பட்ட மறுநாளே ஈராக்கில் உள்ள அமெரிக்க ராணுவ நிலைகளை குறிவைத்து ஈரான் ஏவுகணைகளை வீசி தாக்கியது. இதில் சுமார் 80 வீரர்கள் கொல்லப்பட்டதாக ஈரான் கூறியது. ஆனால் தாக்குதல் நடந்தது உண்மை தான் என்றும் ஆனால் யாரும் சாகவில்லை என்றும் தங்கள் வீரர்கள் பாதுகாப்பாக உள்ளதகாவும் டிரம்ப் அறிவித்தார்.

அமெரிக்க தூதரகம்

இந்நிலையில் சுலைமானியை கொல்ல உத்தரவிட்டது ஏன என்பது குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் வெள்ளை மாளிகையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறும் போது, மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள 4 அமெரிக்க தூதரகங்களை தாக்குவதற்கு காசிம் சுலைமானி சதி திட்டம் தீட்டியதாகவும், அதனாலேயே அவரை கொல்ல உத்தரவிட்டதாகவும் விளக்கம் அளித்தார்.

ஈரான் சதிதிட்டம்

வெள்ளை மாளிகையில் பத்திரிகையாளர்களை சந்தித்த டிரம்ப் கூறுகையில், சுலைமானி கொல்லப்படுவதற்கு சில நாளுக்கு முன்பு ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தை போராட்டக்காரர்கள் சூறையாடினார்கள். அந்த தாக்குதலை ஈரான்தான் நடத்தியது.

அதனால் தாக்குதல்

அந்த தாக்குதலுக்கான ஏற்பாடுகளை செய்தது யார் என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள் அவர் இப்போது உயிருடன் இல்லை. அவர் பாக்தாத் தூதரகத்தை மட்டும் குறிவைக்கவில்லை. மத்திய கிழக்கு நாடுகளில் மேலும் 3 அமெரிக்க தூதரகங்கள் மீதும் தாக்குதல்கள் நடத்துவதற்கு அவர் சதி திட்டம் தீட்டினார்.. இதுபற்றிய உளவு தகவல்கள் கிடைத்த பிறகு அவரை கொலை செய்வதற்கான உத்தரவை பிறப்பித்தேன்" இவ்வாறு கூறினார்.

சுரங்க தொழில்கள்

இதற்கிடையே, ஈராக்கில் உள்ள அமெரிக்க நிலைகள் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியதற்காக ஈரான் மீது அமெரிக்க புதிய பொருளாதார தடைகளை விதித்துள்ளது. இந்த தடைகள் ஈரானின் கட்டுமானம், உற்பத்தி மற்றும் சுரங்க தொழில்களை பாதிக்கும் என கூறப்படுகிறது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd